SocialTwist Tell-a-Friend

அந்த நொடி : சிறுகதை - மழையன்




சென்னை மவுன்ட் ரோடு - டிவிஎஸ் பஸ் நிறுத்தம். நேரம் மாலை 5 மணி. இரண்டு நடுத்தர வயது நபர்கள் தங்கள் பிரியமானவருக்காக காத்திருப்பது போன்று எட்டி எட்டி பார்த்து, கால்கள் நின்ற இடத்தில் அசைந்தவாறு, ஒவ்வொரு பஸ்சின் எண்களையும் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஒரு பாட்டி தனது தோல்பையை நிமிடத்துக்கு ஒருமுறை துழாவிக் கொண்டும், பஸ் வருகிறதா என பார்த்துக்கொண்டும் இருந்தாள்.
பள்ளிச் சிறுவர்கள் இருவர் தங்களது சட்டை அழுக்காகிறதே என்ற கவலையின்றி 'இங்க்' வீசி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
வயதான தாத்தா ஒருவர் கையில் ஏதோ ஒரு இலக்கிய புத்தகத்தை புரட்டிக்கொண்டும், ரோட்டை நோட்டமிட்டுக்கொண்டும் இருந்தார்.
இளைஞர்கள் மூன்றுபேர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பஸ்சுக்காக காத்திருக்கிறார்களா என்ற சந்தேகம்கூட எழும்.
தொங்கிய நீள முடி கொண்ட மாநிற இளைஞன் ரோட்டோரத்திலிருந்து திரும்பியடி பிளாட்பார முனையில் அமர்ந்துகொண்டு, எவ்வித சலனமும் இன்றி இருந்தான்.
இந்தக் காட்சிகளை ஒன்றின் அடுத்து ஒன்றாக பார்த்துக் கொண்டே 15 நிமிடம் ஆகிவிட்டது. நான் ஏறவேண்டிய 17பி பஸ் இன்னும் வரவில்லை.
18ஜி வந்ததும் பள்ளிச் சிறுவர்கள் ஏறினர்; அவசர நடுத்தர நபர்கள் இருவர் ஷேர் ஆட்டோ பிடித்தனர்; அரட்டை இளைஞர்கள் காலாற நடக்கத் தொடங்கினர்; பாட்டிக்கும் பஸ் கிடைத்தாகிவிட்டது; புத்தக தாத்தா 11எச்-ல் ஏறிவிட்டார்.
இப்போது நானும், அந்த இளைஞனும் மட்டும்.
அவன் எழுந்தான். அப்போது அவனை முழுமையாகப் பார்த்தேன். அந்த முகம் என்னை மிகவும் வசீகரித்தது. எப்போதோ அவனைப் பார்த்ததாகவும் பேசியதாகவும், அதோடு மகிழ்ந்ததாகவும் தோன்றியது.
என்னைப் பார்த்தான். முகத்தை எதிர்பக்கம் திருப்பினேன். அவன் நிழல் என்னருகில் வருவதை உணர்ந்து, நான் பின்வாங்கினேன்.
மிக நெருக்கம். மிக மிக நெருக்கம்.
'ஹலோ... ' அழைத்தான்.
'ம்!?'
'சிவரஞ்சனி?'

  • 'ம்!'

'நான் மூர்த்தி.ஞாபகமிருக்கா? சூளைமேடு பெரியார் பாதை முருங்கைமர வீடு. உங்க எதிர்வீடு. 3-ம் கிளாஸ் படிக்கும்போது டிராயிங்கிளாஸ்...'
கால் வினாடியில் ஃப்ளாஷ் பேக் சென்று உடனே வந்துவிட்டேன்.
'டாய் மூர்த்தி...' ஆர்வத்தில் பொங்கினேன்.
நல்லா இருக்கியா? ஆன்ட்டி எப்படி இருக்காங்க..? ஜிம்மி எப்படி செத்தது? காலேஜ் எங்கே? வேலை எங்கே..?
பற்பல விசாரிப்புக்குப் பிறகு, 'கேர்ள் பிரண்டுக்காக வெயிட் பண்றேன்' என்றான்.
அந்த நொடிக்குப் பிறகு, ஏனோ தெரியவில்லை என் ஆர்வம் குறையத் தொடங்கியது
 
Animal Text Generator at TextSpace.net நன்றி மக்கா'ஸ் THANK U! மறுக்கா வாங்க COME AGAIN!